செவ்வாய், 23 ஜூன், 2015

ஏவுகணை விஞ்ஞானி அப்துல்கலாம் - 3

பள்ளிப் படிப்பு
கலாமின் ஆரம்பக் கல்வி அவர் வசித்து வந்த இராமேஸ்வரத்திலேயே அவருக்குக் கிடைத்தது.
அங்கு அவருக்கு கோவில் குருக்களாக வேலை பார்த்து வந்த பட்சி லட்சுமண சாஸ்திரியின் மகன் இராமநாதனின் நட்பு கிடைத்தது. கலாமின் தந்தையும் லட்சுமண சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் பிள்ளைகளும் நட்புடனே பழகி வந்தார்கள்.
இராமநாதன் பள்ளிக்கு வரும் அழகே தனி, உச்சிக் குடுமி, நெற்றி நிறைய பட்டை, பூணுல் என்று வருவார். கலாம் தலையில் குல்லாவுடன் வருவார். இருவரும் அருகருகே அமர்ந்திருப்பார்கள்.
பள்ளிக்கு புதிதாக வந்த ஆசிரியருக்கு இந்தக் காட்சியைப் பார்த்ததும் பிடிக்காமல் போனது. கலாமை கடைசி பெஞ்சில் சென்று உட்காருமாறு கூறினார்.
நண்பர்களுக்கு அழுகை வந்தது. நாம் என்ன தவறு செய்தோம்?’ என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்தது.
குழந்தைகள் வீட்டிற்கு வந்தவுடன் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியை பெற்றோர்களிடம் கூறினார்கள்.
குருக்கள் பள்ளி ஆசிரியரை சந்தித்து ‘‘ சிறு பிள்ளைகளின் நெஞ்சில் மத வேறுபாட்டினை விதைத்துவிட வேண்டாம்’’ என்று கண்டித்தார்.
ஆசிரியரும் தனது செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். அடுத்த நாள் திரும்பவும் நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்கள்.
அந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் சிவசுப்பிரமணிய ஐயர். அவர் அறிவியல் பாடத்தை சுவையாக கற்றுத் தருவார். கலாமின் அறிவாற்றல் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பிற்காலத்தில் சிறந்த மாணவனாக வரவேண்டும்என்று அடிக்கடி கூறுவார்.
ஒருமுறை கலாமை தனது இல்லத்திற்கு உணவு உண்பதற்காக அழைத்துச் சென்றார். ஆனால் சிவசுப்பிரமணிய ஐயரின் மனைவிக்கு இந்தச் செயல் சற்றும் பிடிக்கவில்லை. தனது மனைவியின் செயலுக்கு மிகவும் வருந்திய ஆசிரியர் தனது கையாலேயே கலாமிற்கு சாப்பாடு பரிமாறினார்.
நல்ல பழக்கங்களுடன் வளர்ந்திருந்த கலாம், தான் மற்றவர்களைப் போல இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சாப்பிடுவது, தண்ணீர் அருந்துவது போன்றவற்றில் நாகரிகமாக இருந்ததுடன், தான் உணவருந்திய இடத்தையும் சுத்தம் செய்தார். அதைப் பார்த்த ஆசிரியரின் மனைவி மனம் நெகிழ்ந்தார்.
அடுத்தமுறை அங்கு சாப்பிடச் சென்றபோது ஆசிரியரின் மனைவியே கலாமிற்கு அன்புடன் உணவு பரிமாறினார்.
தனது நல்ல செயல்களால் மற்றவர்களையும் மாற்ற முடியும் என்பதை கலாம் உணர்ந்து கொண்டார்.
இந்த நேரத்தில் அவரது மற்றொரு நண்பரான ஜலாலுதீன் (கலாமிற்கும் அவருக்கும் 15 வயது வித்தியாசம்)  இலக்கியம் பற்றிய பல செய்திகளைக் கூறி கலாமை மகிழ்விப்பார். அவரின் தூண்டுதலால், மாணிக்கம் என்பவர் ஒரு நூலகத்தை நடத்தி வந்ததை அறிந்து அங்கு சென்று புத்தகங்களை வாங்கிவந்து படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார் கலாம்.
ஜலாலுதீன், கலாமை செல்லமாக ஆஜாத்என்றுதான் அழைப்பார்.அவரது குடும்ப சூழல் காரணமாக அவர் படிக்க முடியாமல் போன காரணத்தால் கலாமை நன்கு படிக்குமாறு ஊக்குவித்தார்.
ஜலாலுதீன் நன்கு ஆங்கிலம் பேசவும், எழுதவும் கற்றிருந்தார். எல்லாம் அனுபவப் படிப்புதான். இராமேஸ்வரத்தில் யாருக்காவது விண்ணப்பங்கள் எழுத வேண்டியிருந்தாலோ, கடிதங்கள் எழுத வேண்டியிருந்தாலோ அவர்கள் ஜலாலுதீனிடம்தான் வருவார்கள். அவரும் மகிழ்ச்சியாகவே அவர்களுக்கு உதவி செய்வார்.
கலாமின் மற்றொரு ஒன்றுவிட்ட சகோதரரான சம்சுதீன் அந்தப் பகுதியின் செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு இதழ்களுக்கு முகவராக இருந்த காரணத்தால் செய்தித் தாள்களில் வரும் படங்களைப் பார்த்து திருப்தியடைவார் கலாம். அதில் இடம் பெறும் விஷயங்கள் அப்போது கலாமிற்கு புரியும் வயதில்லை.
அப்போது நாளேடுகளில் தவறாமல் இடம் பிடிப்பவை விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய செய்திகள். அவற்றை கவனமாகப் படிக்கும் சகோதரர் சம்சுதீனும் அவருக்கு நிறைய உலக நடப்புகளை எடுத்துச் சொல்வார்.
கலாம் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே புளியங்கொட்டைகளை சேகரித்து மளிகைக் கடை ஒன்றில் கொடுத்து தினமும் ஒரு அணா பெறுவார்.
இராமேஸ்வரத்தில் ரயில் நிற்பதை தடை செய்தார்கள், அதனால் தனுஷ்கோடிக்குச் செல்லும் ரயிலில் இருந்து பத்திரிக்கைகளை பிளாட்பாரத்தில் வீசிவிட்டுச் செல்வார்கள். அதை சரியான நேரத்திற்கு எடுத்துவந்து கொடுப்பது கலாமின் வேலையாகிப் போனது. சம்சுதீன் அதற்கு சம்பளம் கொடுத்தார். அதுதான் கலாமின் முதல் சம்பாத்தியம். அதை இன்றும் மறக்கவில்லை கலாம்.
ஆரம்பக் கல்வி முடிவடைந்தது, உயர்நிலைக் கல்விக்கு  இராமநாதபுரம் சென்றுதான் படிக்க வேண்டும். கலாமின் தந்தை மகிழ்வோடு மகனை அனுப்பி வைத்தார்.
இராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் பள்ளி கலாமின் உயர்நிலைப் படிப்பு தொடர வழிவகுத்தது. அதனால் பெருமை பெற்றது, அங்கிருந்த அய்யாதுரை சாலமன் என்னும் ஆசிரியரின் அன்புக்குரியவராக மாறிப்போனார் கலாம். கலாமின் அந்த வயதுக்கே உரிய குழப்பமான மனநிலையை மாற்றி தெளிவு ஏற்படச் செய்தவர் அந்த ஆசிரியர்தான்.
‘‘ எதை விரும்பினாலும் அது நிறைவேற வேண்டும் என்றால் அதற்கு தீவிரமாக ஆசை கொள்ள வேண்டும், அந்தச் செயல் நிச்சயமாக நடக்கும் என்று நம்பவேண்டும்’’ என்றதோடு ‘‘அவரவர் தலைவிதியை அவரவர்தான் நிர்ணயிக்கிறார்கள்’’ என்பதையும் அவர்தான் கலாமிற்குக் கற்றுக் கொடுத்தவர்.
இன்று இளைஞர்களை ‘‘கனவு காணுங்கள்’’ என்று கலாம் கூறுவதற்கு அடித்தளம் அமைத்தவர் அவர்தான்.
இருந்தபோதும் அவரின் மனம் கவர்ந்த இராமேஸ்வரம் போல இராமநாதபுரம் அவருக்கு அவ்வளவாக ஒத்துவரவில்லை. அம்மா செய்து தரும் விதவிதமான போளிகளும், வீட்டிலுள்ளோர்களின் அன்பும் அவரை ஏங்க வைத்தன.
சமயம் கிடைத்தபோதெல்லாம் இராமேஸ்வரத்திற்குச் சென்றுவருவதை வழக்கமாக்கிக் கொண்டார். அவ்வாறு வரும்போதெல்லாம் தனது அண்ணன் மற்றும் தம்பி வைத்திருந்த கடைகளில் நேரத்தைக் கழிப்பது கலாமிற்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
பதினொன்றாம் வகுப்பு வரை தமிழிலேயே படித்தார் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்வில் சாதனை படைக்க மொழி ஒரு தடையல்ல என்பதற்கு கலாமின் வாழ்வே உதாரணமாகும்.
அந்தப் பள்ளியில் அவர் படித்துக் கொண்டிருந்தபோதுதான் நாடு விடுதலை அடைந்தது. நேருவின் உரையை வானொலியில் கேட்டார் கலாம். அதேநேரம் கல்கத்தாவில் ஏற்பட்ட இந்து & முஸ்லீம் கலவரம் பற்றி நாளேடுகளில் படித்த அவர் வேதனையடைந்தார். காந்தியடிகள் அதைத் தடுப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள் கலாமிற்கு காந்தியின் மேல் ஒரு நேசத்தை உண்டாக்கியது.
பள்ளியில் படிக்கும்போதே தனது தேவைகளுக்கான பணத்தை தானே சம்பாதிக்கும் பழக்கத்திற்கு வந்திருந்தார் கலாம். ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தானே சென்று அண்ணன் சம்சுதீனுக்கு உதவியாக பேப்பர் போடும் வேலை பார்ப்பார், அதில் கிடைக்கும் பணத்தை தனது செலவிற்குப் பயன்படுத்திக் கொண்டார்.
கலாம் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சம்பவம் நடைபெற்றது. ஒருமுறை கலாமின் கணக்கு வாத்தியாரான ராமகிருஷ்ண ஐயர் மற்றொரு வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது கலாம் திடீரென உள்ளே நுழைந்தது கண்டு கலாமை பிரம்பால் அடித்து விட்டார். ஆனால் சில மாதங்களுக்குப் பின்னால் அவரே கலாமை கணக்குப் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றதற்காக காலை பிரேயரின்போது வாழ்த்திப் பேசினார்.‘‘நமது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பிற்காலத்தில் இந்தப் பையன் பெருமை சேர்க்கப் போகிறான்’’ என்று கூறினார்.
இன்று அது உண்மையாகிவிட்டது.
சம்சுதீன் மற்றும் ஜலாலுதீன் இருவரும் கலாமின் வெளி உலக அறிவு வளர்வதற்கு மிகவும் உதவியாக இருந்தனர்.
பள்ளிப் பாடங்களைத் தவிர ஏராளமான புத்தகங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசித்தார் கலாம்.

மொழிப்பற்றுடன் நாட்டுப் பற்றும் அவரிடம் அமைந்திருந்தது.

மலாலா - 12

மருத்துவமனையில்...
இராணுவத்தினருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய பெரிய மருத்துவ மனையான சி.எம்.ஹெச். சிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
600 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டங்கள் எழும்பிக் கொண்டிருந்த மருத்துவமனை அது.
மாலை ஐந்து மணிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் உடனே மலாலா அனுமதிக்கப் பட்டாள்.
ஹலோனல் ஜுனாய்டு என்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் முதலில் பரிசோதித்தார்.
தற்போது நினைவுகள் உள்ளன ஆனால் பேச முடியவில்லை என்று கூறிய அவர் இடது கண்ணுக்கருகே குண்டு துளைத்த இடத்தில் தையல் போட்டுவிட்டு பின்னர் ஸ்கேன் செய்து பார்த்து தலைக்குள் குண்டு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே இடது தோள் பட்டைக்கு அருகில் குண்டு இருப்பதைக் கண்டறிந்தார். மேலும் பல பரிசோதனைகளை அவசரமாகச் செய்தார்.
குண்டு துளைத்ததனால் சிதறிய எலும்புத் துண்டுகள் மூளையின் ஜவ்வை லேசாக பாதிப்படையச் செய்துள்ளன என்பதையும் கண்டுபிடித்தார்.
அறுவை சிகிச்சை தற்போது தேவையில்லை என்று  கூறிவிட்டார் அவர்.
மலாலாவின் தந்தைக்கு இந்த மருத்துவமனையில்  தன் மகளை சரிவர கவனிக்கவில்லையோ என்ற  குழப்பம் ஏற்பட்டது. அதனால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமா?” என்று கேட்டார்.
என்னுடைய அனுபவத்தில் நான் இதுபோல் ஆயிரம் மலாலாவைப் பார்த்திருக்கிறேன்.  எனவே நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் பெண்ணின் உயிருக்கு எதுவும் நேர்ந்துவிடாது, நம்பிக்கை கொள்ளுங்கள்என்று மருத்துவர் உறுதியாகக் கூறியதைக் கேட்டபின்னரே யூசுப் சாய் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
அதே நேரத்தில் மலாலாவின் தாயாருக்கு விஷயம் தெரிந்துவிட்டது. அவர் மலாலாவின் பாட்டியிடம் சென்று பேத்திக்காக மனமுருகி பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
பெரியவர்களுடைய மனமுருகிய பிரார்த்தனைக்கு அல்லாஹ் உடனடியாக செவி சாய்ப்பான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மலாலாவின் தாயாரிடம் அக்கம்பக்கத்தவர், சுற்றத்தார் ஆகியோர் விசாரிப்பதற்காக வந்தவண்ணம் இருந்தனர்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் மலாலாவின் அழகிய முகம் தெரிந்தது. ஊரில் அனைவரும் மலாலாவைப் பற்றியே பேசித் தீர்த்தார்கள்.
கற்பனையில் அவர்கள் சொல்லும் விஷயங்களைக் கேட்கக் கேட்க மலாலாவின் தாய்க்கு  பயம் அதிகரித்தது. மலாலாவின் தம்பிகள் இருவரும் ஒரு ஓரமாக கதறி அழுதபடியே அமர்ந்திருந்தனர்.
தன் மகளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று நினைத்துப் பார்த்தவண்ணம் இருந்த நேரம் ஹெலிகாப்டர் ஒன்று இறங்கும் சத்தம் கேட்டது.
மலாலா வந்துவிட்டாள், மலாலா வந்துவிட்டாள்என்று சுற்றியிருந்தவர்கள் கூச்சலிட்டார்கள்.
மலாலாவின் தாய், சத்தமாக யா அல்லாஹ் என் மகளை உன்வசம் ஒப்படைத்துவிட்டேன், அவளை மீண்டும் என்னிடம் தருவது உன் பொறுப்புஎன்று கதறியழுதார்.
மலாலாவின் ஊருக்குப் போன் செய்த மரியம் டீச்சர் மலாலாவின் நிலை பற்றி எடுத்துக் கூறிவிட்டு, “நீங்கள் இங்கே வந்து அழுதுவிடக் கூடாது. நீங்கள் நம்பிக்கை இழந்து பேசுவதை மலாலா கேட்டால் அவளும் நம்பிக்கை இழக்க நேரிடும் என்பதால் நீங்கள் அவளிடம் நம்பிக்கை தரும் வார்த்தைகளைத்தான் பேசவேண்டும்என்று கூறினார்.
அதன்பின்னர் அங்கிருந்து கிளம்பிய மலாலாவின் தாயும், அடாலும் மாலை நேரம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். மலாலா இருக்குமிடத்தை நோக்கி விரைந்து சென்றனர்.
யூசுப் சாய் தன்னுடைய மனைவியிடம், “எந்த ஒரு சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இறைவனின் விருப்பம் எதுவென்றாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.என்று தைரியம் கூறித் தேற்றினார்.
ஆனால் சிறுவன் அடால் எவ்வளவோ முயன்றும் தன்னுடைய அழுகையை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்.
அக்காவை அதுவரை பார்த்திராத நிலையில் பார்க்கப் பார்க்க அவனுக்குள் அழுகை பொங்கியது.
தன்னிடம் அன்பாகப் பேசி விளையாடிய அக்கா இப்படி பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறாளே என்ற அதிர்ச்சியை அவனால் தாங்கிக் கொள்ள  முடியவில்லை.
ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் உடனடியாகக் கண்டனம் தெரிவித்தார்கள்.
தங்கள் நாட்டில் உயர்தரமான சிகிச்சை வழங்குவது குறித்து  பாகிஸ்தான் இராணுவத்தின்  அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்டக் குழுவை அனுப்பி இருந்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
அபுதாபி இளவரசரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராணுவத்தின் துணைத் தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஸயாத் அல் நயான் உயர்ந்த லட்சியத்திற்காக தீவிரவாதிகளால் சுடப்பட்டு படுகாயமடைந்துள்ள  மாணவிக்கு எங்கள் நாட்டில் உயர்ந்த மருத்துவ சிகிச்சை வழங்க எங்கள் அரசு தயாராக உள்ளதுஎன்று உடனே தெரிவித்தார்.
ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா புஷ் ஆகியோர் மலாலா சுடப்பட்டதைக் கண்டித்து கட்டுரை எழுதினார்கள்.
அமெரிக்காவிலிருந்து ஹிலாரி கிளிண்டன் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பிரபல பாப் பாடகி மடோனா  தன்னுடைய மனித சுபாவம்என்ற பாடலை மலாலாவிற்காக சமர்ப்பணம் செய்தார்.
பாகிஸ்தானின் முக்கிய அரசியல்வாதிகள், பல்வேறு தலைவர்கள், கல்வி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், முக்கியப் பிரமுகர்கள், ஆளுநர், தொழில் அதிபர்கள் என்று பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து பார்த்துச் சென்றனர்.
ஆளுநர் மலாலாவின் மருத்துவச் செலவுக்காக ஒரு லட்சம்  ரூபாய் தருவதாக வாக்குக் கொடுத்தார்.
பொதுவாக சாகும் தருவாயில் இருப்பவர்களைத்தான் இப்படி வந்து பார்த்து ஆறுதல் சொல்வார்கள். நம்பிக்கை தரும் விதமாகப் பேச யாருமே வரவில்லையே என்று மலாலாவின் தந்தை மிகவும் வருந்தினார்.
அடால் அப்போது டி.வி.யை ஆன் செய்தான். அதைப் பார்த்த யூசுப் சாய் அவனை அதட்டினார்.
ஆனால் மரியம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தாள் மலாலா.
உலகின் பல்வேறு இடங்களில் மலாலா உயிர் பிழைக்க வேண்டுமென்று செய்யப்பட்ட பிரார்த்தனைகள், அவளுக்காக கதறி அழுத குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோரின் பேச்சுக்களைப் பார்த்தும், கேட்டும் சற்றே தெளிவடைந்தாள்.
நமக்காக இத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவளுக்கு ஆறுதல் அளித்தது.
அதே நேரத்தில் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. வாந்தி வருவதுபோல் இருந்தது.
திரும்பவும் ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளையின் வீக்கம் அதிகரித்திருப்பது தெரிந்தது.
அபாயகரமான வீக்கமாகவே அது இருந்தது.
எலும்புத் துகள் உள்ளே சென்றிருப்பதால் மண்டை ஓட்டை லேசாக விலக்கிப் பார்த்துவிடலாம். இதுதான் அறுவை சிகிச்சைக்கான சரியான நேரம்என்று மருத்துவர் கூறினார்.
மருத்துவமனை நடைமுறைப்படி பல படிவங்களில் யூசுப் சாயிடம் கையெழுத்துக்களை வாங்கினார்கள்.
அறுவை சிகிச்சை இரவு 1.30 மணிக்குத் தொடங்கியது.
யூசுப் சாய் இறைவா என் உயிரைக்கூட எடுத்துக் கொள் ஆனால் மலாலாவின் உயிரை மீண்டும் கொடுஎன்று மனமுருகிப் பிரார்த்தித்தார்.
மலாலாவின் தாயோ புனித நூலான குர் ஆனைத் தொடர்ந்து படித்தபடியே இருந்தார்.
அதைப் பார்த்த மரியம் மிகவும் வியந்து போனார்.
தொடர்ந்து இப்படி வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல் மனம் ஒன்றி குர்ஆனைப் படிக்க முடியுமா? என்பதே அவரின் வியப்புக்குக் காரணம்.
அங்கிருந்த நர்ஸ், “மலாலாவிற்கு இரத்தம் தேவைப் படுகிறதுஎன்று கூறியவுடன்  யூசுப் சாயின் நண்பர் உடனே இரத்தம் கொடுத்தார்.
மண்டையோட்டின் சிறிய பகுதியை எடுத்து அடி வயிற்றுப் பகுதியில் வைத்துத் தைத்தார்கள்.
மூன்று மாதங்கள் சென்றவுடன் மீண்டும்  பொருத்திக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.
எங்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் இதே போல்தான் தாக்கப்படுவார்கள் என்று தாலிபன் அமைப்பு தெரிவித்திருந்த சூழ்நிலையிலும் அதற்கு பயப்படாமல் மூன்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவளின் உடல் நிலையைப் பரிசோதிப்பதற்காக வந்திருந்தனர்.
அடுத்தநாள் காலையில் இராணுவப் படைத்தளபதி ஜெனரல் ஹயானி வருகை புரிந்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் பரிசோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு, “வெளிநாட்டில் சிகிச்சையளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்என்று கூறினார். அதுகுறித்து தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கினார்.
பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், தாலிபான்களின் வெறியாட்டத்தால் தன்னுடைய மகனை இழந்த தகவல் தொடர்புத் துறை மந்திரி மியான் இவ்திஹார் குசைன், பழங்குடியினத்தவரின் முதல்வர் ஹைடர் கோட்டி ஆகிய அனைவரும் மலாலாவைப் பார்க்க வந்தபோதும்ஒருவரையும் மருத்துவமனை நிர்வாகம் மலாலா இருந்த அறைக்குள் அனுமதிக்கவில்லை.
நம்மை விட்டு மலாலா ஒருபோதும் பிரிய மாட்டாள் நீங்கள் எந்த சூழலிலும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இறைவன் கருணை நிறைந்தவன் அவன் நம்மைக் கைவிட மாட்டான்என்று கோட்டி ஆறுதல் கூறிச் சென்றார்.
மாலை 3 மணியளவில் பர்மிங்ஹாமில் வேலை பார்க்கும் ஜாவித் கையானி, பியானோ ரினால்ஸ் என்ற பிரிட்டிஷ் டாக்டர்கள் இருவர் ராவல் பிண்டியிலிருந்து மலாலாவைப் பார்க்க வந்தார்கள்.
அவர்கள் வந்து பரிசோதித்த பின்னர் அடிப்படை வசதிகள், தொடர் கவனிப்பு போன்றவை இல்லாத காரணத்தால் மலாலா இறக்கும் சூழல் கூட ஏற்படலாம் என்று கூறினார்கள்.
உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலாலாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.
யூசுப் சாய் பாஸ்போர்ட்டைக் கையில் ஏந்தியபடி, “இது அவளை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப் போகிறதா? இல்லையெனில் இறைவனின் திருவடிகளுக்கே அழைத்துச் செல்லப் போகிறதா?” என்று மனம் வெதும்பினார்.
வியாழக்கிழமை காலையில் மலாலா உயிர்விடப்  போகிறாள் என்றே அவர் நினைத்தார். சிறுநீரகம், நுரையீரல் ஆகியவை தங்களின் செயல்பாட்டை 75 சதவிகிதம் இழந்ததன் அறிகுறியாக முகம், உடல் ஆகியவை வீங்கத் தொடங்கியிருந்தன.
டாக்டர் பியானோ நீங்கள் ராவல்பிண்டியிலிருக்கும் இராணுவ மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றி விடுவது நல்லதுஎன்று கூறினார். அதன்படியே ஆயத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இவளைக் காப்பாற்றத் தவறிவிட்டோமானால் பாகிஸ்தானின் அன்னை தெரசாவை நாம் இழந்து விட்டவர்களாகி விடுவோம்என்று நினைத்தார் டாக்டர் பியானோ.
ராவல்பிண்டிக்குச் சென்று மூன்றுமணி நேர தொடர் சிகிச்சைக்குப் பிறகே மலாலா இயல்புநிலையை நோக்கித் திரும்பத் தொடங்கியிருந்தாள்.
இருந்தபோதும் மலாலாவை தொடர் கவனிப்பில் வைத்திருந்தார்கள். அவளை பாகிஸ்தான் பிரதமர் பார்ப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது.
எந்த விஷயத்தாலும் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அவ்வளவு கவனம் செலுத்தினார்கள்.
இராணுவமே அனைத்து முடிவுகளையும் எடுத்தது. மலாலாவின் பெற்றோர்களைவிட அந்த சூழலில் அவர்களே சரியான முடிவுகளை எடுத்தார்கள்.
மருத்துவர்கள், “மலாலாவின் வலது மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் அவளின் இடதுபக்கத்தில் உள்ள உறுப்புகள் பாதிப்படையத் தொடங்கியுள்ளன. அவளுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிப்பதே சரியான தீர்வுஎன்று கூறினார்கள்.
மலாலாவைக் கொலைசெய்ய முயன்றவர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் ஃபத்வா அறிவிக்கப்பட்டது.
உலக கல்விக்கான ஐ.நா. சிறப்புத் தூதரும், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமருமான கோர்டான் பிரௌன்  2015 ஆம் ஆண்டில் உலகில் எந்தக் குழந்தையும் கல்வி கற்காமல் இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன், “நான் மலாலாஎன்ற மனு இயக்கத்தைத் தொடங்கினார்.
அக்டோபர் 15ம் தேதி திங்கள்கிழமை இங்கிலாந்திற்குப் புறப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரை அழைத்துச் செல்ல விமானம் கொடுத்து உதவியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
அவளுடன் யூசுப் சாயுன் உடன் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் யூசுப் சாயின் உறவினர் ஒருவர் மலாலாவின் குடும்பத்தினருக்கு தாலிபான்களால் ஏதேனும் ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது என்று கூறியதால் யூசுப் சாய் உடன் செல்லாமல் அங்கேயே இருந்துவிடுவது என்று முடிவு செய்தார்.
மலாலாவிற்கு நேர்ந்தது அவளின் தம்பிகளுக்கும் நேர்ந்துவிடக்கூடாது.  எனவே நான் போகமுடியாது. எனக்காக நீங்கள் செல்ல முடியுமா?” என்று டாக்டர் பியானோவிடம்  கேட்டுக் கொண்டார்.
நான் கடவுளிடத்தில் முழுமையாக என் குழந்தையை ஒப்படைத்துவிட்டேன். என் குழந்தையின் எதிர்காலத்தை அவரே வழிநடத்துவார்என்றும் கூறினார்.
இரட்டை படுக்கையறை வசதியுடன், முதல் வகுப்பு இருக்கைகள், சிறிய மருத்துவமனை வசதி, நர்ஸ்கள், டாக்டர்கள் என்று பலவிதமான வசதிகளை உள்ளடக்கிய விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அபுதாபியில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு பர்மிங் ஹாம் செல்லும் விமானம் அது. யூசுப் சாய் மற்றும் மலாலாவின் தாய் ஆகியோர் உடன் செல்வதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கமே முன் நின்று செய்தது. பெரும்பான்மையானோர் மலாலா இறந்துவிடுவாள் என்றே நினைத்தார்கள்.

ஆனால் தாலிபன்களுக்கு சவால்விடும் விதமாக, ‘வீழ்வேனென்று நினைத்தாயோஎன்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கேற்ப எழுந்து நின்றாள் மலாலா.

மலாலா - 11

பரபரப்பு காட்சிகள்
தொலைக்காட்சியில் குஷால் பள்ளிப் பேருந்தில் துப்பாக்கிச் சூடு என்று பிளாஸ் நியூஸ் ஓடியதைப் பார்த்தவுடன் பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்த மரியம் என்பவரின் நெருங்கிய  உறவினர் ஒருவர் அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
உடனே பதறி அடித்தபடி தன் கணவரையும் உடன் அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மலாலாவைஉடனே பார்த்துவிட வேண்டும் என்று பதற்றத்துடன்  விரைந்து சென்றார் மரியம்.
சிகிச்சையளித்த மருத்துவர்கள் தோட்டாக்கள் நெற்றிப் பகுதியில் பாய்ந்திருந்தபோதும் மூளையை சேதப்படுத்தவில்லை என்பதைத் தெரிவித்தார்கள்.
மூளைப் பகுதியில்  தோட்டாக்கள் பட்டிருந்தாலோ,பாய்ந்திருந்தாலோ விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருந்திருக்கும். நல்லவேளையாக அப்படி எதுவும் நடைபெறவில்லை.
மலாலாவின் தோழி ஷாஷியா ரம்ஜானுக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. ஒரு தோட்டாதான் பாய்ந்திருந்தது என்றபோதும் உடலில் இரண்டு இடங்களில் துளைத்துச் சென்றிருந்தது.
ஹய்னாட்டிற்கு சிறிய காயம்தான் என்று வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தனர். ஆனால் வீட்டிற்குச் சென்றவுடன்தான் அவளுடைய உடலிலும் தோட்டா பாய்ந்திருப்பதைக் கண்டார்கள்.
உடனடியாக அவளும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
மாகாணத்தின் முதல்வர் உடனடியாக மலாலாவின் தந்தைக்கு போன் செய்து ஆறுதல் தெரிவித்தார். பெஷாவரில் உள்ள பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற  தான் ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.
சம்பவம் நடைபெற்றதை அறிந்தவுடன் பாகிஸ்தான் இராணுவத்தினர் உடனே அங்கு விரைந்தனர்.
தங்கள் கட்டுப்பாட்டிற்குள் மலாலாவைக் கொண்டுவந்த அவர்கள் ஹெலிகாப்டரில் அவளை பெஷாவர் நகருக்கு உடனடியாக அழைத்துச் சென்றார்கள்.
வீட்டில் பால்குடி மாறாத பிள்ளை இருந்தபோதும் அவளைக் கவனிப்பதற்கு வேறு ஆட்களிடம் சொல்லி விட்டு, மலாலாவின் மேல் இருந்த பாசத்தின் காரணமாக தலைமையாசிரியை மரியமும் உடன் சென்றார்.
பெஷாவரில் இறங்கி ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும் வழியில் தீவிரவாதிகளால் மீண்டும் தாக்கப்படுவோமோ என்று யூசுப் சாய் சற்றே பயந்தார். உறவுக்காரர் ஹான்ஜி, அகமது ஷா, தலைமையாசிரியை மரியம் ஆகியோர் ஆறுதல் கூறித் தேற்றினார்கள்.
ஹெலிகாப்டருக்கு உள்ளே மலாலா இரத்த வாந்தி எடுக்கத் தொடங்கினாள். யூசுப் சாய்  நம்பிக்கையிழக்கத் தொடங்கினார்.
அவளின் கண்களைப் பாருங்கள், அவை கண்ணீர் சொரிகின்றன, அவள் உடலிலும் பலமான அசைவுகள் தெரிகின்றன. எனவே நீங்கள் பயப்பட வேண்டாம். எல்லாம் வல்ல இறைவன் அவளைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பான் நீங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருங்கள்என்று அவ்வப்போது யூசுப்பிடம் நம்பிக்கை தரும் வார்த்தைகளைக் கூறி தேற்றினார் மரியம்.

ஏவுகணை விஞ்ஞானி அப்துல்கலாம் - 2

கலாமின் பிறப்பு
தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு ஆன்மீகத் தலம் இராமேஸ்வரம். வடநாட்டில் காசியும் தென்னாட்டில் இராமேஸ்வரமும் இந்துக்களின் புனிதமான ஊர்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய தீவு. இந்தியாவின் ஈடு இணையற்ற மனிதரைப் பெற்றெடுத்த பெருமையைப் பெற்ற ஒரு தீவு.
அந்தக் காலத்தில் இராமேஸ்வரம் செல்வது என்பது ஒரு சிரமமான காரியம். மண்டபம் எனும் இடத்திலிருந்து இராமேஸ்வரம் செல்வதற்கு அந்தப் பகுதி முஸ்லீம்களால் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அத்தகைய பெருமை வாய்ந்த ஊரில் இருந்த அலாவுதீன் மரைக்காயர் முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலின் மூத்த அவுலியாக பதவி வகித்து வந்த ஜெயின் அலாவுதீன் என்பவருக்கும் அவரது மனைவி ஆஷியம்மா என்பவருக்கும் 1931ம் வருடம் அக்டோபர் மாதம் 15ம் தேதி  அப்துல் கலாம் பிறந்தார்.
அவரின் முழுப் பெயர் அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம். சுருக்கமாக ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.
கலாமின் தந்தை ஜெயின் அலாவுதீன் அதிகம் படிக்காதவராக இருந்தபோதும் அனுபவ அறிவு நிரம்பப் பெற்றவர். தர்ம சிந்தனையும், ஆழ்ந்த இறை பக்தியும் உடையவர். ஆடம்பரத்தை விரும்பாதவர்.
மசூதி தெருவில் கலாமின் முன்னோர்களால் கட்டப்பட்ட பாரம்பரிய வீட்டில்தான் அவர்கள் வசித்து வந்தனர். அந்தப் பகுதியில் சில இந்துக் குடும்பங்களும் வசித்து வந்தனர். அனைவரும் மத ஒற்றுமையோடு வாழ்ந்து வந்தார்கள்.
நடுத்தரமான குடும்பம்தான் என்றபோதும் வந்தவர்களை வரவேற்று உபசரிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். வீட்டிலுள்ளவர்களைவிட வெளியில் இருந்து வருபவர்கள்தான் அவர்கள் வீட்டில் அதிகமாக சாப்பிடுவார்கள். அனைவரையும் மனம் கோணாமல் அன்போடு உபசரிப்பது கலாமின் அன்னையுடைய வழக்கம்.
கலாமை அவரது தாயார் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். கலாம் என்ன கேட்டாலும் கிடைக்கும். மற்ற சகோதர, சகோதரிகளும் அவர்மேல் பிரியமாகவே இருந்தார்கள்.
கலாமின் தந்தை மத வேறுபாடுகளைப் பாராமல் இந்துக்களிடமும் அன்பாகவே பழகி வந்ததை சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த கலாம் இன்றுவரை அதேபோலவே வாழ்ந்து வருகிறார்.
கலாமின் தந்தை காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார், மதக் கடமையான ஐந்து வேளை தொழுகையில் ஒரு நாளும் தவறுவதில்லை. இறைநம்பிக்கை மிகுந்தவராக இருந்த காரணத்தால் அந்தப் பழக்கமும் கலாமிடம் இயல்பாகவே அமைந்திருந்தது.
‘‘எந்த நேரத்திலும் இறைவன் நமக்குத் துணையிருப்பான் அதனால் நாம் பிரச்சனைகளைக் கண்டு அஞ்சக்கூடாது’’ என்று அறிவுரை கூறுவார் கலாமின் தந்தை.
அவரது தாயாரும் பல நீதிக்கதைகளைக் கூறி கலாமை நல்வழிப்படுத்தினார். பெருந்தன்மை போன்ற குணங்களை அவரது அன்னையிடமிருந்து பெற்றார் கலாம்.
இயற்கையின் அளப்பரிய ஆற்றலைக் காணும் சந்தர்ப்பம் 6 வயதானபோது அவருக்குக் கிடைத்தது. அவரது தந்தை கஷ்டப்பட்டுக் கட்டிய படகு ஒருநாள் கடலின் அளப்பரிய சீற்றத்தால் சுக்கு நூறாகிப் போனதைப் பார்த்த கலாமிற்கு இயற்கையின் சக்தி வியப்பளித்தது.
படகை கட்ட ஆரம்பித்ததிலிருந்து அது இயற்கையினால் சுக்குநூறானது வரை கலாம் அருகிலிருந்து பார்த்தார்.
பல நல்ல பழக்கவழக்கங்கள் அவரது குடும்பத்தாரிடமிருந்து அவருக்கு வந்திருந்தது.

ஞாயிறு, 21 ஜூன், 2015

ஏவுகணை விஞ்ஞானி அப்துல்கலாம் - 1

இவர்
இந்தியாவின் பெருமைக்குரிய மனிதர். இன்றுவரை 26 பல்கலைக் கழகங்களால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்.
இந்திய அரசால் பத்ம பூஷண், பத்ம விபூஷன், பாரத ரத்னா விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தப்பட்டவர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் சாதிக்க முடியும் என்பதை தன் வாழ்க்கையின் மூலம் காட்டிக் கொண்டிருப்பவர், அதேபோல எவ்வளவு உயர்ந்த பதவிக்குப் போனாலும் எளிமையாக இருக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர்.
குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தபோதும் அதைவிட்டு வந்தபோதும் எளிமை, எளிமையென்று தனது ஒவ்வொரு செயலிலும் வாழ்ந்து காட்டியவர்.
இந்தியாவின் கடைக்கோடி நகரில் பிறந்து டெல்லியில் பெரும் பதவியில் அமர்ந்த பெருமை பெற்றவர்.
பதவியால் இவருக்குப் பெருமை என்பதைவிட இவரால் அந்தப் பதவிக்குப் பெருமை என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.
பிறப்பால் ஒரு முஸ்லீமாக இருந்தபோதும் எந்தவிதமான மத உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டவர்.
இன்றைய இளைஞர்களை கனவு காணுங்கள்என்று கூறி அவர்களுக்கு உற்சாகம் தந்தவர். இளைஞர்களை வாழ்வில் மட்டுமல்லாமல் நாட்டு நலனிலும் ஈடுபாடு கொள்ளச் செய்தவர்.
புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர், பரந்த மனப்பான்மை உள்ளவர்.
இவர் சொல்லியவைகளைவிட செய்தது அதிகம். அவரது வாழ்க்கை இளைஞர்களை உற்சாகம் கொள்ளச் செய்யும். தன்னம்பிக்கை ஊட்டும்.

அவரது வாழ்வின் சாதனைகளைப் பார்க்கலாம்.